
மொத்தமாக பெரிய தொகை போடுவதற்குப் பதில், கார் கடன் மூலம் கார் வாங்குவது நல்ல யோசனையாக அவர்களுக்குத் தோன்றுகிறது. ஆனால் கார் கடன் பெற என்னென்ன நிபந்தனைகள் போடுவார்களோ என்று தான் தயங்குகிறார்கள்.
சரி, கார் கடன் பெறுவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? கார் கடன் வாங்கும் நபருக்கு குறைந்தபட்சம் 21 வயதாகி இருக்க வேண்டும். பொதுவாக, கடன் முடியும்போது மாதச் சம்பளக்காரர்களுக்கு 60 வயதும், சுய தொழில் செய்பவர்களுக்கு 65 வயதும் இருப்பதுபோல் இருந்தால்தான் கடன் கிடைக்கும்.
குறிப்பிட்ட நிறுவனத்தில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்து வர வேண்டும். பொதுவாக, மாதச் சம்பளக்காரர் எனில், தற்போதைய பணியில் குறைந்தபட்சம் ஓராண்டும், மொத்தத்தில் வேலைக்கு வந்து இரண்டு ஆண்டுகளும் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
இது பொதுவானது. சிலர் தனியார் வங்கிகளில் கார் கடன் வாங்க, தற்போது பணிபுரியும் நிறுவனத்தில் பணி நிரந்தரம் செய்யப்பட்டு 2 ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும். வேலைக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும்.
மாதந்தோறும் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் தொகை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு இருந்தால் மட்டுமே கடன் கிடைக்கும். உதாரணமாக, ஒருவர் இ.எம்.ஐ. ஆக ரூ. 5 ஆயிரம் கட்ட வேண்டும் என்றால், அவர் அதற்கு மேல் ஒரு குறிப்பிட்ட தொகையை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் நிலையில் இருக்க வேண்டும்.
கடன் வாங்குபவரின் ஆண்டுச் சம்பளம் குறைந்தபட்சம் சுமார் இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் இருப்பது அவசியம். சுயதொழில் செய்பவர் எனில், ஆண்டு நிகர லாபம் குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும்.
சில நிறுவனங்கள், வீட்டில் அவசியம் லாண்ட் லைன் (தரைவழி தொலைபேசி இணைப்பு) இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கிறார்கள். வருமானத்தை உயர்த்திக் காட்ட, கடன் வாங்குபவரின் சம்பளத்தோடு மனைவியின் வருமானத்தையும் சேர்த்துக் காட்டி, கூடுதல் தொகையைக் கடனாக வாங்க முடியும்.
0 comments:
Post a Comment