
சிலருக்கு தவிர்க்க முடியாத காரணங்களினால், உள்ளூரில் இருந்தாலும் ஆஸ்டலில் தங்கிப் படிக்கும் சூழ்நிலை அமைந்துவிடுகிறது. சரி.. ஆஸ்டலில் தங்கிப்படித்து முடித்துவிட்டு வெளியே வரும்போது அவர்கள் மனநிலை எப்படி இருக்கும்?
- அப்பாடா விட்டது தொந்தரவு, என்று நினைத்து மகிழ்ச்சி அடைவார்களா?
- அருமையான வாழ்க்கை முடிந்துபோய்விட்டதே, என்று வருத்தம் கொள்வார்களா? இதற்காகவே ஒரு சர்வே எடுக்கப்பட்டது. கருத்துக்கணிப்பில் இடம்பெற்ற மாணவிகளில் பெரும்பாலானவர்கள் ‘ஆஸ்டல் வாழ்க்கை தங்களுக்கு பிடித்திருக்கிறது. அதில் மகிழ்ச்சி மட்டுமல்ல மிகப்பெரிய வாழ்க்கை அனுபவங்களும் கிடைத்திருக்கின்றன' என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.
பழைய காலத்தில் குருகுல வாசம் என்ற கல்வி முறையில் படித்து வந்தார்கள். அதாவது கல்வி கற்று முடிக்கும் வரை குருவின் இருப்பிடத்திலேயே தங்கி வாழ்க்கையை படிக்கவேண்டும். கல்வியையும், வாழ்வியல் அனுபவங்களையும் பெற்றுவிட்டுத்தான் மாணவர்கள் வீடு திரும்பு வார்கள். காலப்போக்கில் அந்த முறை மாறிவிட்டது.
அதன் நவீன வடிவமாக ஆஸ்டல் வாழ்க்கை திகழ்கிறது. இதுவும் ஒருவகை குருகுல வாசமே. மாணவர்கள் நேரத்தோடு சாப்பிடவும், படிக்கவும், தூங்கவும் ஆஸ்டலில் பழகிக் கொள்கிறார்கள். இவை ஒரு விதத்தில் அவர்களுக்கு நல்லவையே. வெளியே சென்றால் நேரத்தோடு திரும்பவேண்டும்.
வெளியே போகும்போது சொல்லிவிட்டு செல்லவேண்டும். ஆஸ்டல் பாதுகாப்பாளரின் அனுமதி இல்லாமல் எங்கும் செல்லக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன. அந்த கட்டுப்பாடுகளை ஏற்று வாழ தங்களை பக்குவப்படுத்திக்கொள்கிறார்கள். தோழமையோடு ஒன்றுகூடி பழகவும், நல்லது, கெட்டவைகளை பகிர்ந்துக் கொள்ளவும் கற்றுக் கொள்கிறார்கள்.
மற்றவர்களின் சிரமங்களையும், கஷ்டங்களையும் பார்த்து உணர்கிறார்கள். அதனால் அடுத்தவர்களுக்கு உதவும் அனுபவத்தை பெறுகிறார்கள். அத்தகைய அனுபவங்கள்தான் அவர்களுடைய மனதை பக்குவப்படுத்துகிறது. தனியாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் தைரியத்தையும் வழங்குகிறது.
வீட்டில் மாணவர்கள் ஒரு இளவரசர் போலவும், மாணவிகள் இளவரசிகள் போலவும்தான் வாழ்க்கை நடத்துகிறார்கள். அவர்கள் கேட்டது, கேட்ட நேரத்தில் கிடைக்கவேண்டும் என்று கெடு விதிக்கிறார்கள். இல்லாவிட்டால் ஆத்திரம் அடைகிறார்கள்.
ஆனால் அதெல்லாம் இயல்பான வாழ்க்கைக்கு ஒத்துவராத பழக்கம் என்பதை ஆஸ்டல் வாழ்க்கைதான் அவர்களுக்கு உணர்த்துகிறது. ஆஸ்டல் வாழ்க்கை அவர்களுக்கு ஓரளவு மனஅழுத்தத்தை தரத்தான் செய்கிறது. ஆனால் அதற்கான மருந்தும் அங்கே கிடைக்கிறது.
அந்த மருந்துதான் நட்பு. மாணவ-மாணவிகள் நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசி பழகுவதன் மூலம் அவர்களுடைய மன அழுத்தம் குறைகிறது. தோழமையையும், நட்பையும் வளர்த்துக் கொள்ள ஆஸ்டல் வாய்ப்பு தருகிறது. சாதி, மதத்தை பற்றிய வேறுபாடுகள் அங்கே களையப்படுகின்றன.
அதுவே நல்ல குடிமகனாக அவர்கள் உருவாக்க வழிவகுக்கிறது. பண்டிகைகள், திருவிழாக்கள், தெய்வ வழிபாடு போன்றவற்றில் ஒற்றுமையோடு கொண்டாடவும், வாழ்த்துகள் கூறி மகிழ்ச்சி கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது. அது அவர்களின் மனதை விசாலமாக்கி வேற்றுமைகளை வெளியேற்றுகிறது.
மனோ தைரியம் ஆஸ்டலில் வசித்த மாணவ-மாணவிகளிடம் நிறைய இருக்கிறது. பிற்காலத்தில் அவர்கள் தனியாக வெளியே செல்லும்போதும் அதிக மனதைரியத்தோடு செயல்படுகிறார்கள். தனித்து விடப்படும் நிலையில் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறையும் அவர்களுக்கு தெரிகிறது.
சூழ்நிலைக்கு தக்கபடி சமயோசிதமாய் செயல்படவும் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். ‘நீச்சல் தெரிந்தவர்கள் ஆழத்தைப் பார்த்து பயப்பட மாட்டார்கள்’ என்று கூறுவார்கள். அதுபோல் ஆஸ்டலில் படித்தவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் சாதாரண பிரச்சினைகளை கண்டு கலங்குவதில்லை என்கிறார்கள்.
ஆணோ, பெண்ணோ படித்து முடித்த பின்பு வேலைக்காக வெளியூர்களுக்கு செல்லவேண்டி யதாகிவிடுகிறது. வீட்டிலே படித்து வளரும் மாணவிகளுக்கு பெற்றோர் நிறைய தைரியம் கொடுத்து தான் அனுப்பவேண்டியதிருக்கிறது. எப்படி, எவ்வளவு தைரியம் கொடுத்தாலும் அது மனதளவில் பெரிய ஆற்றலை உருவாக்காது.
ஆனால் தன்னம்பிக்கை, தைரியம் போன்றவை சொல்லிக் கொடுத்து வருவதல்ல. அனுபவ ரீதியான பயிற்சி மூலம் அவை கிடைக்கவேண்டும். அந்த பயிற்சி மாணவிகளுக்கு ஆஸ்டல் வாழ்க்கை மூலம் கிடைத்துவிடுகிறது.
சமூகத்தை நேருக்கு நேர் எதிர் கொள்ளவும், பிரச்சினைகளை தனியே நின்று சமாளிக்கவும் அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். ஆஸ்டலில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகள் தங்களுடைய வேலையை தாங்களே சுயமாக செய்துகொள்ளும் நல்ல பழக்கத்தை கற்றுக்கொள்கிறார்கள்.
தங்களின் உடமைகளை பாதுகாத்துக் கொள்ளும் விழிப்புணர்வையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். வீட்டிலே அவர்கள் வளர்கிறார்கள் என்றால், பெற்றோர்கள் படிக்கும் பிள்ளைகளை வேலை வாங்கக் கூடாது என்று கூறி, அவர்களை சோம்பேறிகளாக்கி விடுகிறார்கள்.
பிள்ளைகள் வளர வளர பெற்றோருக்கு வேலைகள் அதிகமாகிக்கொண்டே போகும். பின்பு அதுவே பெற்றோருக்கு சுமையாக மாறி, அவர்களை எரிச்சலடைய செய்துவிடும். கல்வி மட்டும் ஒருவருக்கு போதாது. நல்ல பழக்கவழக்கங்கள், கட்டுப்பாடு, ஒழுக்கம் போன்றவை எல்லாம் தேவை. அவை அனைத்தையும் ஆஸ்டல் வாழ்க்கை தரும் என்று நம்புகிறார்கள்.
0 comments:
Post a Comment