காவல்துறையால் பெண்கள் அனைவருக்கும் பாதுகாப்பு கொடுக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை. ஆனால், பெண்களுக்கான பாதுகாப்பு சூழலை உருவாக்கித் தருவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவது, பணிபுரியும் இடங்களில் பெண்களின் பாதுகாப்புக்கான வழிமுறைகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் காவல்துறை கவனம் செலுத்தி வருகிறது. பெண்களின் உரிமை மற்றும் தனித்தன்மையை காக்க தனி சட்டங்களும் இருக்கின்றன. ஆனால், இதன்மூலமாக மட்டுமே பெண்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய முடியாது. எனவே, பெண்களும் தங்கள் பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் கவனம் கொள்ள வேண்டியது அவசியம்.
பெண்கள் எந்த சூழ்நிலையிலும் தனது கவனத்தை சிதற விடக்கூடாது. நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். தெரியாத இடத்திற்கு செல்வதாக இருந்தால், ஒன்றுக்கு இரண்டு முறை அந்த இடத்தைப் பற்றி தெரிந்துகொண்டு செல்ல வேண்டும். பின்னிரவு நேரங்களில் தனியாக செல்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக போக வேண்டிய நிலை ஏற்பட்டால், தனக்கு மிகவும் வேண்டியவரை உதவிக்கு அழைத்துச் செல்வது உகந்தது.
சில்மிஷம் செய்யும் ஆண்களை அடையாளம் கண்டால் தைரியமாக தட்டிக்கேட்பது நல்லது. பொது இடமாக இருந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். தனியாக செல்லும்போது மாட்டிக்கொள்ள நேந்தால் நைசாக பேசி, அந்த இடத்தைவிட்டு சென்றுவிட வேண்டும்.
மேலும் வீட்டில் மற்றும் குடும்பத்தில் உள்ள சுதந்திரத்தை வெளியிடங்களிலும் அனுபவிக்க நினைப்பது ஆபத்தில் முடியலாம். பழகும் நபர் எப்படிப்பட்டவர் என்று தெரியாத நிலையில், அவருடன் தனிமையில் பேசுவதை தவிர்க்க வேண்டும். சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்ட இன்றைய சூழ்நிலையில், அனாவசியமான சாட்டிங் மற்றும் தகவல் பரிமாற்றங்களை தவிர்க்க வேண்டும்.
என்னதான் தற்காப்பு கலைகளை கற்றுத் தேர்ந்து தைரியமாக சென்றாலும், எப்போதும் அது கைகொடுக்காது. கண்மூடித்தனமான தாக்குதல்களை சமாளிப்பது பெண்களுக்கு இயலாத காரியம். எனவே, தற்காப்பு கலைகளைவிட வரும்முன் காக்கும் கலையே பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரும்.


0 comments:
Post a Comment