• home
Home » » பெண்களை பாதிக்கும் மனச்சோர்வு

பெண்களை பாதிக்கும் மனச்சோர்வு

பெண்களை பாதிக்கும் மனச்சோர்வுமனச்சோர்வு இப்போது பெண்களை வெகுவாக பாதிக்கிறது. ‘அது ஆண்களையும் பாதிக்கத்தானே செய்கிறது!’ என்று நீங்கள் சொல்லலாம். உண்மைதான். ஆனால் டீன்ஏஜ் பருவம் வரை ஆண்களும்- பெண்களும் மனச்சோர்வு பாதிப்பில் ஒரே அளவில் இருக்கிறார்கள். 

அதன் பின்பு ஆண்களைவிட இரு மடங்கு அதிகமான அளவு பெண்கள் மனச்சோர்வால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது, சமீபத்திய புள்ளிவிவரங்கள். பருவ வயதை கடக்கும்போது ஆண்களைவிட பெண்கள் மனச் சோர்வு அதிகமடைய அவர்களது உடல் இயக்கநிலையும், சமூக நிலையும் காரணமாக இருக்கிறது. 

உடல் இயக்க நிலையை பொறுத்தவரையில் ஈஸ்ட்ரஜன், புரோஜஸ்ட்ரான், ஆக்சிடோசின் போன்ற ஹார்மோன்களின் செயல்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. பருவ வயதிற்கு பிறகு மேற்கண்ட பெண் ஹார்மோன்களின் செயல்பாடுகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், பெண்களின் மனச் சோர்வு அதிகரிக்க ஒருவிதத்தில் காரணமாக இருக்கிறது. 

ஹார்மோன்கள் தரும் இத்தகைய நெருக்கடி, பெண்களுக்கு மாத விலக்கு தொடங்கும்போது உருவாகிறது. பின்பு மாதவிலக்கு நாட்கள், கர்ப்பம், பிரவசம், பிரசவத்திற்கு பிந்தைய காலம், பாலூட்டும் காலம், மாதவிலக்கு நிலைக்கும் மனோபாஸ் சூழல் போன்ற காலகட்டங்களிலும் ஹார்மோன் நெருக்கடி பெண்களுக்கு ஏற்படுவதால்தான் அந்தந்த காலத்தில் பெண்கள் அதிக மனச்சோர்வுக்கு உள்ளாகிறார்கள். 

சமூக சூழலை பொறுத்தவரையில் பெண் வயதுக்கு வந்த பின்பு ஆணும்-பெண்ணும் தனித்தனியாக பிரித்து பார்க்கப்படுகிறார்கள். பெண்களிடம் இந்த சமூகம் எதிர்பார்ப்பதே வேறுவிதமாக இருக்கிறது. பருவவயதில் ஆணிடம் வன்மையான சுபாவம் வளருவது இயற்கையாக இருக்கிறது. 

அதை புரிந்துகொண்டு அங்கீகரிக்கும் சமூகம் அதே பருவத்தில் இருக்கும் பெண்ணிடம் மென்மையான நிலையை எதிர்பார்க்கிறது. மென்மை சுபாவத்தை பெண்களிடம் திணிக்கவும் செய்கிறது. ‘பெண் என்றால் எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளவேண்டும். விட்டுக்கொடுக்கவேண்டும்’ என்றெல்லாம் கூறிக்கொண்டே இருக்கிறது. 

உடல் ஒன்றை சொல்ல, சமூகம் இன்னொன்றை எதிர்பார்க்க அதனால் ஏற்படும் முரண்பாட்டு நெருக்கடிகளும் பெண்களிடம் மனச்சோர்வு அதிகரிக்க காரணமாக இருக்கிறது. ‘கிட்டத்தட்ட எல்லா பெண்களும் மனச்சோர்வு கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்’ என்கிறது, சமீபத்திய மனநல ஆய்வுகள்.

0 comments:

Post a Comment