• home

கர்ப்பிணிகள் வாக்கிங் செல்வது நல்லதா?

இன்றைய காலகட்டத்தில் எல்லோருமே வாக்கிங் செல்கிறார்கள். ஆனால் கர்ப்பிணிகள் வாக்கிங் செல்வது நல்லதா? என்ற எண்ணம் பலருக்கு உள்ளது. கர்ப்பிணிகளும் வாக்கிங் செல்வது நல்லது அது, அவர்களை சுறுசுறுப்பாக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கர்ப்பிணிகளைப் பொறுத்தவரை அளவோடு வாக்கிங் செல்வதுதான் நல்லது. 20 முதல் 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்வது அவர்களது உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும், கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து உடல்நிலையை பலப்படுத்தும்.

கர்ப்பிணிகளைப் பொறுத்தவரை, அந்த கர்ப்பக்காலத்தின் ஆரம்ப மாதங்களிலும், கடைசி மாதங்களிலும் களைப்பு உடனேயே ஏற்பட்டு விடும். அவ்வாறு களைப்பு ஏற்படும்போது தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது.

கர்ப்பக்கால களைப்பின்போது இரவு நேரத்தில் முன்னதாக படுக்கைக்கு செல்வதுதான் நல்லது. அதில், இடையூறுகள் ஏற்படும்பட்சத்தில், வேலையின் இடையே ஒரு மணி நேரமாவது அமைதியாக கால்களை உயரே தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பது நல்லது.

மேலும், தங்களால் முடிந்த வேலைகளை மட்டும் செய்யலாம். களைப்பை ஏற்படுத்தும் வேலைகளை கட்டாயம் செய்யக் கூடாது. சில பெண்களுக்கு கர்ப்பக்காலத்தில் மனஇறுக்கம் ஏற்படுவது போன்று இருந்தால், அதில் இருந்து விடுபட மிதமான உடற்பயிற்சிகளை வயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுக்காதவாறு செய்யலாம். இசை கேட்டு மகிழ்ச்சியை வரவழைத்துக் கொள்ளலாம்.

வலிப்பு நோய் உள்ள பெண்கள் கர்ப்பமடையலாமா?

வலிப்புள்ள பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கலாமா? அப்படியே செய்தாலும், அவளால் கருத்தரிக்க முடியுமா? குழந்தை பெறுவதில் சிக்கல் இருக்குமா… என்கிற கேள்விகள் வலிப்பு வருகிற பெண் குழந்தைகளைப் பெற்ற அனைத்து பெற்றோர்களையும் ஆட்டிப் படைக்கும். ‘‘வலிப்பு நோய் பாதிச்ச பெண்கள் கருத்தரிக்கிறதுல சிக்கல் வரும் வாய்ப்பு அதிகம்.

அப்படியே கருத்தரிச்சாலும் பிறக்கற குழந்தையோட மூளை வளர்ச்சியும் முதுகுத்தண்டும் பாதிக்கிற அபாயங்களும் உண்டு. மனித வாழ்க்கைக்கு ஆதாரமான டி.என்.ஏ. ஆரோக்கியமா இருக்கவும், பிறக்கற குழந்தை பிரச்சனை இல்லாம இருக்கவும், வலிப்பு நோயுள்ள பெண்கள், கர்ப்பம் தரிக்கிறதுக்கு முன்பிருந்தே கவனமா இருக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

சில பெண்களுக்கு 3-4 வருஷங்களா வலிப்பே வராமலிருக்கலாம். அதுக்காக வழக்கமா எடுத்துக்கிற மருந்துகளை நிறுத்திடக்கூடாது. ஒருவேளை கர்ப்பம் தரிச்சா, குழந்தையைப் பாதிக்குமோங்கிற பயத்துல அந்த மருந்துகளை நிறுத்தவே கூடாது.

வலிப்பு நோய்க்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளுடன் சேர்த்து, ஃபோலிக் அமில மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். பிரசவ நேரத்தில் சில பெண்களுக்கு வலிப்பு வரலாம். கர்ப்ப காலத்துல இவங்களுக்குப் போதுமான தூக்கமும் ஓய்வும் முக்கியம்.

அடிக்கடி மருத்துவப் பரிசோதனை செய்து, உடம்புல உள்ள மருந்து அளவுகளையும், ரத்த அளவையும் சரி பார்க்கணும். வலிப்புள்ள பெண்களுக்கு சுகப்பிரசவம் நிகழ எந்த சிக்கலும் இருக்காது. பிரசவத்துக்குப் பிறகு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கலாம்.

ஆனால் கருவில் இருக்கும் போதே, குழந்தைக்குப் போன அதிகபட்ச மருந்துகளோட தாக்கத்தால, குழந்தைக்கு முதுகுத்தண்டு பிரச்சனையோ, மந்த புத்தியோ வரலாம். அதைத் தவிர்க்கத்தான், கர்ப்பம் தரிக்கிறதுக்கு முன்பான எச்சரிக்கை அவசியம்.

அம்மாவுக்கு வலிப்பு இருந்தால், அவர்களுக்கு பிறக்கற குழந்தைக்கும் வலிப்பு வரும் வாய்ப்பு குறைவு என்கின்றனர் மருத்துவர்கள். அதாவது சாதாரண பெண்களுக்குப் பிறக்கற குழந்தைகளுக்கு வலிப்பு வரும் வாய்ப்பு வெறும் 1 சதவிகிதம்னா, வலிப்புள்ள பெண்களுக்குப் பிறக்கற குழந்தைகளுக்கு அது இன்னும் 1 சதவிகிதம் அதிகம்.

அவ்வளவு தான். முன்னெச்சரிக்கையும் கண்காணிப்பும் இருந்தால், வலிப்பு நோயுள்ள பெண்களும், ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம் என்பதே மருத்துவர்களின் அறிவுரை.

தோலை மெருகேற்ற தோள் கொடுக்கும் கொய்யா

மென்மையான தோலும், சதைப்பற்றுமாக மலிவான விலையில் கிடைக்கும் இந்தப் பழத்தில் இருக்கும் அழகு பலன்கள் ஏராளம். நமக்கு வேண்டிய அழகையும் ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் இதன் இலை, பழம், குச்சி போன்றவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

* பற்களின் பளிச் வெண்மைக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறது கொய்யா இலை. கொய்யா இலையை காயவைத்து பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரால் தினமும் பல் தேய்த்து வந்தால் முத்துப்போல் பிரகாசிக்கும் பற்களுக்கு சொந்தக்காரராகி விடலாம்.

* காய வைத்த கொய்யா இலை பவுடர் 50 கிராம், சர்க்கரைத்தூள் 20 கிராம், கற்பூரத்தூள் 5 கிராம் என எடுத்து, இந்த மூன்றையும் கலந்து பல் தேய்த்தால் வாய் துர்நாற்றம் நீங்குவதுடன் ஈறுகளில் வலி, வீக்கம் போன்றவை இருந்தாலும் குணமாகும்.

* என்ன தான் எண்ணெய் வைத்தாலும் வறண்டு போய்க் காட்சியளிக்கிறதா உங்கள் கூந்தல்? அதைப் பளபளப்பாக்கும் டெக்னிக் சிவப்பு கொய்யாவில் இருக்கிறது. கொட்டை இருக்கும் சிவப்பு கொய்யாப் பழத்தை நறுக்கி வெயிலில் உலர்த்தி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்த பவுடர் 2 டீஸ்பூன், கொய்யா இலையை அரைத்து எடுத்த சாறு 3 டீஸ்பூன் இரண்டையும் நன்றாகக் கலந்து தலை முழுவதும் பூசுங்கள். வறண்ட கூந்தல் பளபளவென மின்னுவதுடன் கருமையாகவும் மாறும்.

* சர்க்கரை சேர்க்காத கொய்யாப்பழ ஜுஸின் நுரையை நகம், உதடு மற்றும் பாதத்தில் தடவி வந்தால், அவை பட்டுப் போன்று மிருதுவாக மாறுவதுடன் பளபளப்பும் கூடும்.

* குட்டையான கூந்தல் வளர வழி தெரியவில்லையா? தலைக்குக் குளிக்கும் போது கடைசி `மக்' தண்ணீரில் சிறிது கொய்யாபழ ஜுஸை கலந்து குளியுங்கள். முடி வளர்ச்சி தூண்டப்படுவதுடன் கூந்தலும் மின்னல் போல் டாலடிக்கும்.

* கொய்யா இலையை அரைத்து ஜுஸாக்குங்கள். இதில் ஒரு கப் ஜுஸை எடுத்து அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு, அரை கப்பாக சுண்டும் வரை காய்ச்சுங்கள். இதனுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளை இந்த எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைத்தால், அம்மை, தழும்பு போன்ற அடையாளங்கள் மறைவதுடன் அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட எந்த வியாதியும் பிள்ளைகளை நெருங்காது.

* தோலின் நிறத்தை மெருகேற்றுவதிலும் தோள் கொடுக்கிறது கொய்யா. கொய்யப் பழத்தை விழுதாக அரைத்து முகம் முழுவதும் பூசுங்கள். காய்ந்த பிறகு கழுவுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் ஓரிரு மாதங்களிலேயே, உங்கள் சிவப்பழகின் ரகசியத்தை விசாரிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

* ச்சே! இந்த முகப்பரு, முகத்தின் வசீகரத்தையே கெடுக்குதே. என்ன செய்றதுன்னே தெரியல என்று டீன் ஏஜ் நண்பர்கள் அதிகமாகவே கவலைப்படுவர். முகப்பருக்களை கிள்ளுவதால் உண்டாகும் தழும்புகளை விரட்டியடிக்க உதவுகிறது. கொய்யாப்பழ இலை. கொய்யா இலையை பேஸ்ட்டாக அரைத்து பரு மற்றும் தழும்புகளில் பூசுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வர, முகப்பருவா... அப்படினா என்ன? என்று கேட்பீர்கள்.

தலைமுடியை வலுவடையச்செய்யும் எண்ணெய்

விளாம் இலையில் இருக்கிறது இதற்கான தீர்வு! விளாம் மர இலை. செம்பருத்தி இலை - தலா 5, கொட்டை நீக்கிய பூந்தித் தோல் - 4. இவற்றைச் சேர்த்து, தண்ணீர் விட்டு, நன்றாக அரையுங்கள். இதைத் தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்துக் குளியுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வர, கேசத்தின் அடர்த்தி அதிகரிக்கும்.

* வறண்ட கூந்தல் இருப்பவர்களுக்கு அருமருந்து விளாம்பழத்தின் ஓடு! காய வைத்து உடைத்த விளாம்பழ ஓட்டின் தூள்- 100 கிராம், சீயக்காய், வெந்தயம்- தலா கால் கிலோ.. இவற்றை அரைத்து, தலையில் தேய்த்துக் குளித்து வர, பஞ்சாகப் பறந்த கூந்தல் படிந்து பட்டாகப் பளபளக்கும்.

* முடி கொட்டும் பிரச்சனையா? அதைத் தடுப்பதில் விளாம் மர இலைக்கு தனிப் பங்கு உண்டு. சுருள் பட்டை - 100 கிராம், வெந்தயம் - 2 டீஸ்பூன், வெட்டிவேர் - 10 கிராம். விளாம் பர இலை - 50 கிராம்.

இவற்றை கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு, ஒரு வாரம் தொடர்ந்து வெயிலில் வைத்து, வடிகட்டிக் கொள்ளுங்கள். தினமும் இந்தத் தைலத்துடன் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து, தலைமுடியின் வேர்க்கால்கள் முதல் அடிமுடி வரை தடவுங்கள். முடி கொட்டுவது நிற்பதுடன் கருகருவென வளரவும் தொடங்கும்.

* வெயிலிலும் தூசியிலும் அலைவதால் கூந்தல் அழுக்கடைந்து பிசு பிசு வென்று இருக்கிறதா? செம்பருத்தி இலை, விளாம் இலை சம அளவு எடுத்து அரைத்துத் தலைக்குக் குளிக்க, மூலிகை குளியல் போல அற்புத வாசனையுடன் இருக்கும். எண்ணெய், சீயக்காய் எதுவும் தேவையில்லை.

கோதுமை ரவை ஊத்தாப்பம்

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை - 1 கப்
தயிர் - 1 கப்
இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

• இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

• வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கோதுமை ரவையை போட்டு 5 நிமிடம் வறுத்து, ஆற வைக்கவும்.

• பின்னர் அதனை ஒரு பௌலில் போட்டு, தயிர், இஞ்சி, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

• மற்றொரு பௌலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை போட்டு கலந்து கொள்ள வேண்டும்.

• 30 நிமிடம் ஆன பின்னர், தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஒரு கரண்டி ரவை மாவை ஊற்றி, லேசாக தேய்த்து, பின் அதன் மேல் வெங்காய கலவையை தூவி, எண்ணெய் ஊற்றி, சிறிது நேரம் கழித்து, கவனமாக திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால் சுவையான கோதுமை ரவை ஊத்தாப்பம் ரெடி.

மிக்ஸ்டு ஃப்ரூட் பன்ச்

மிக்ஸ்டு ஃப்ரூட் பன்ச்தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் – 1/2 கப்,
மாம்பழம் – 1/2 கப்,
பப்பாளிப் பழம் – 1,
மாதுளை முத்துகள் – 1/4 கப்,
ஆப்பிள் – 1/2 கப்,
இளநீர் – 250 மி.லி.
புதினா – 4 இலை,
தேன் – 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை :

• மிக்ஸியில் எல்லாப் பழவகைகளையும் புதினா, இளநீருடன் சேர்த்து அரைக்கவும். பிறகு தேன் சேர்த்து கலக்கி பரிமாறவும்.

• வைட்டமின் ஏ சத்தும் இளநீரில் உள்ள மினரல்ஸ்சும் ஆரோக்கியத்துக்கு நல்லது.

பெண்களுக்கு மாரடைப்பு வரும் அறிகுறி தெரியுமா?

பெண்களுக்கு மாரடைப்பு வரும் அறிகுறி தெரியுமா?பெண்களுக்கு மாரடைப்பு வராது என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கும் மாரடைப்பு வரும். ஆனால் அறிகுறி எளிதில் தெரிவதில்லை. பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது, அதற்கான அறிகுறிகள் பெரிய அளவில் தெரிய வருவதில்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது பெரும்பாலான நேரங்களில் தெரிவதில்லை என்றும் வாஷிங்டனில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வு கூறுகிறது. மிகத் தீவிரமாக மாரடைப்பு ஏற்படும்பட்சத்தில், அது மாரடைப்புதான் என்று தெரிந்தால் மட்டுமே அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ள முடியும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

நோயாளிகளின் அறிகுறிகளை வைத்தே டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள் என்பதால், பெண்களுக்கு மாரடைப்புக்கான சிகிச்சை தெரிய வராமல் போய் விடுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. முதுகின் மேல்புறம் வலி, வாந்தி, சுவாசிப்பதில் ஏற்படும் சிரமம், மூக்கடைப்பு, அஜீரணம் போன்றவை பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதன் அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக மாரடப்பு விகிதம் பெண்களுக்கு குறைவு என்ற போதிலும், அவை ஏற்படும் அறிகுறிகள் தெரியாத போது, சிகிச்சை எடுத்துக் கொள்ள இயலாமல் போவதால், திடீர் மரணம் ஏற்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது. மாரடைப்பு ஏற்படும் பெண்களுக்கு, அதற்கான அறிகுறிகள் வெகுநேரம் முன்பாகவே வந்திருக்கக்கூடும்.

எனவே மாரடைப்பு என்று தெரிய வந்தவுடன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் தீவிர சிகிச்சை அளிக்கக்கூடிய ஆம்புலன்ஸில் செல்வதே சிறந்தது என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. அப்போது தான் உயிரைக் காப்பாற்ற முடியும்.

பெண்களைப் பொருத்தவரை அவர்களுக்கும், சிகிச்சை அளிப்பவர்களுக்கும் மாரடைப்பு என்று அறிந்து கொள்வதற்கே தாமதம் ஆவதாலேயே சில நேரங்களில் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.